இளம் வாலிபரின் கேள்விகளும், பெற்றோரின் குமுறல்களும் குறித்த ஒரு அலசல்.
வாலிபப் பிள்ளைகளை வைத்திருக்கிற பெற்றோர் இப்படியா சொல்வதுண்டு "இந்த காலத்துல வாலிபப் பசங்களை வளர்க்கிறது மடியில நெருப்பை கட்டிட்டு இருக்கிறமாதிரி இருக்குது" . ஒரு நேரம் ஒரு மாதிரி பேசுறான் இன்னொரு நேரம் வேறமாதிரி பேசுறான் இவனை புரிஞ்சுக்க முடியலப்பா என்பாரும் உண்டு. தம்பி எம்பொண்ணு அந்தப் பையனை தான் கல்யாணம் பண்ணுவேன் இல்லைன்னா செத்துடுவேன்ணு சொல்றா. அவள் சொல்லுகிற பையன் சரியான பொறுக்கிப் பையன்னு தெரிஞ்சும் அவனைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறா. கேட்டா எல்லா கல்யாணத்துக்கப்புறம் சரியாகிவிடும் என்கிறாப்பா. தம்பி எம்பையன் தோலுக்கு வளர்ந்துட்டான், ஆனா புத்திகெட்ட பையல இருக்கான். சின்ன பிள்ளைகளுக்கு இருக்கிற அதே புத்திதான் இருக்கு. எங்க அடிச்சா ஒடிப்போய்விடுவானோ பயமாயிருக்கு. நாட்டு நடப்பைத்தான் பேப்பர்ல பார்க்கிறோமே.
சரி தம்பி தங்கைச்சி அப்பா அம்மா சொல்றத கவனிச்சிங்களா. இப்ப உங்க டைம், சரி உங்க பிரச்சனைகளை சொல்லுங்கப்பா. அண்ணே இப்பவாது டைம் கொடுத்தீங்களே ரொம்ப நன்றிண்ணே. அட என்னாண்னே எங்கப்பா ஆரம்பத்துல கூலி வேலை பார்த்து இப்ப படிப்படியா முன்னேறி இப்ப நல்ல நிலைக்கு வந்திருக்கிறாரு. ஆனா எப்ப பார்த்தாலும் பணத்தோட அருமை தெரியணும்டா நானெல்லாம் அந்த காலத்துலன்ன சொல்லி பழைய பல்லவியை ஆரம்பிச்சாருண்ணா அவ்வளவுதான் என்று சொல்லும் போதே தம்பியின் முகமெல்லாம் வாடிப்போனதைக் கண்டு நான் பதறிப்போனேன். தங்கச்சி நீ சொல்லும்மான்னு சொல்றதுக்குள்ளே திறந்து விட்ட மடையில் தண்ணீர் பாய்ந்து வருவதுபோல அண்ணே இங்க பாருங்க நான் B.E படிச்சிருக்கேன் எங்கப்பா இரண்டாங்கிளாஸ்தான் படிச்சிருக்காங்க. ஆனா என்னை கஷ்டப்பட்டு B.E படிக்க வைச்சாங்கண்ணே அதெல்லாம் நான் தப்பு சொல்லல. ஆனால் இப்ப எங்க கம்பெனியில் வேலை பா£க்கிற ஒருத்தரை காதலிக்கிறேன்னு சொல்லும் போதே தங்கச்சியின் முகத்தில் ஏற்பட்ட பிரகாசத்தைப் பார்த்தவுடனே எனக்கு அவளுடைய காதலின் ஆழம் புரிஞ்சுப்போச்சு. எம்மா நீ சொல்லும்மான்னு சொல்ல, எங்க அப்பா, அம்மாகிட்ட சொன்னா அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன? அவன் குடும்பம் சரியில்ல, நான் என்ன அவருடைய குடும்பத்தையா கல்யாணம் பண்ணப்போறேன். என்னண்ணே சொல்றீங்கன்னு கேட்க நானும் பதறியடித்து, ரொம்ப சரின்னு சொல்ல அவள் தொடர்ந்தாள். நான் B.E படிச்சுருக்கேன் நான் என்ன முடிவெடுக்க தெரியாத முட்டாளா? அண்ணே எங்கதைய கேளுங்க நீங்களே அழ ஆரம்பிச்சு விடுவீங்கன்னு ஒரு தம்பி தன் சோகக் கதையைச் சொல்ல ஆரம்பிச்சான். அண்ணே எங்கப்பம்மாவுக்கு நான் ஒரே பையன், கேட்டதெல்லாம் கிடைக்குது. அப்பாம்மா பாசமா வைச்சிருக்காங்க. நல்லா படிடா படிச்சா தான் சமுதாயத்துல மதிப்பு இருக்கும். நல்ல அந்தஸ்தை பெறலாம் என்றெல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்றது போல சொல்றாங்க. ஆனால் எனக்க படிப்பு மண்டையில ஏறமாட்டேங்குது. நண்பர்களோடு நல்லா சுத்தணும், சினிமா போகனும், பீச்சில போய் ஜாலியா பொழுதை கழிக்கணும்னா ரொம்ப இஷ்டமாயிருக்கு அதனால படிப்புல கவனம் செலுத்த முடியல. அதான்ணே நம்ம பைபுள்ளகூட சொல்லியிருக்கே "நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை. நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன் அப்படியானால் நான் அல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது" (ரோமர்: 7-15,17) இப்படி என் மனசு ஒரு குரங்கு கையில கிடைச்ச பூமாலையைப் போல அடிபாடு படுதுண்ணே. என்று சொல்லும் போதே தம்பியின் கண்ணில் கண்ணீர் வந்ததைக் கண்டு இவன் பரலோக ராஜ்யத்திற்கு தூரமானவனல்ல என்று என் ஆவியில் உணர்ந்து கொண்டேன்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த போது, எண்ணன்னே பட்டிமன்ற நடுவர் மாதிரி தீர்ப்பா சொல்லப் போறிங்க? நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுண்ணு மட்டும் சொல்லிபோடாத தம்பி. பெற்றோரின் ஆதங்கத்தையும் இளசுகளின் விவாதத்தையும் பலரிடமும் கொண்டு வந்து விடைகாண முற்பட்ட வேளையிலே, அண்மையிலே இளசுகளின் மூளையைப் பற்றி செய்த ஆராய்ச்சியை ஆராய்ந்தால் முடிவு கிடைத்து விடும் என்றெண்ணி இந்த ஆராய்ச்சிக் கட்டுரையை அலச ஆரம்பித்தேன். உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இதுவரையில் மனித மூளையானது விடலைப் பருவத்தில் (Teen age) முழு வளர்ச்சியடைந்து விடும் என்று தான்அறிவியலாளர்கள் நம்பியிருந்தனர். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அது தவறு என்றும் விடலைப் பருவத்தினரின் உடலமைப்பு முழு மனிதனைப் போல் வளர்ச்சி அடைந்ததாய் காணப்பட்டாலும், அப்பருவத்தினரின் மூளை வளர்ச்சி குழந்தைப் பருவத்தினரைப் போல் தான் காணப்படுகிறது. ( Adolescents may look like young adults but thier brain structure resembles that of much younger children) . அதாவது அவர்களின் உடல் வளர்ச்சி அடைந்த அளவுக்கு அவர்களுடைய மூளை முழு வளர்ச்சி அடையவில்லை. இன்னும் சற்று விளக்கமாக சொல்கிறேன் கேளுங்கள்.
பொதுவாக மனித மூளையானது நான்கு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இந்த நான்கு பகுதிகளில் விடலைப்பருவத்தில் நான்காவது பகுதியான முன்மடல் புறணி (Pre frontal cortex) முழுமையான வளர்ச்சியடைவதில்லை. இந்த பகுதி முழு வளர்ச்சி அடைவது நபருக்கு நபர் வேறுபடுகிறது. பொதுவாக 20 வயதிலிருந்து 30 வயதிற்குள் தான் முழு வளர்ச்சி யடைகிறது. அதனால தம்பி, எனக்கு மீசை வளர்ந்திட்டு,அதனால எனக்கு எல்லாம் தெரியும்னு சட்டை காலரை தூக்கி விடுறது, அப்பாகிட்ட எதிர்த்து நிற்கிறது இதெல்லாம் தப்புப்பா. அண்ணே எல்லாம் புரியுது. டேய் ஆளுதான்டா வளர்ந்திருக்க, அறிவு இன்னும் வளரணும்டான்னு சொல்லாம்ம சொல்றீங்க. தம்பி நான் சொல்லல அறிவியல் சொல்லுது.
சின்ன டவுட்ண்ணே. இப்ப மூளையில் இருக்கிற நான்கு பகுதியில் மீதமுள்ள மூன்று பகுதிதான் முழு வளர்ச்சி அடைந்திருக்கே அப்ப எப்படி அறிவு வளர்லன்னு சொல்றீங்க. நல்ல கேள்வி தங்கச்சி. மூளையின் இந்த நான்காவது பகுதியான Pre frontal cortex பகுதிதான் முக்கிய முடிவுகள் எடுப்பது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது, முன்னெச்சரிக்கை, திட்டமிட்டு செயல்படுதல், ஒருவரைப் புரிந்து கொள்வது போன்ற முக்கிய நிகழ்வுகளை கட்டுப்படுத்துகிறது. அண்ணே நாங்க எந்தெந்த விஷயத்துல வீக்கா இருக்குமோ அதையெல்லாம் இந்த பகுதிதான் கட்டுப்படுத்துகிறதா ஆச்சரியமாயிருக்கே. ஒரு பஸ்ல இஞ்சின் பொருத்தியாச்சு சீட் மாட்டியாச்சு பெயிண்ட் அடிச்சு பாக்குறதுக்கே பிரம்மாதமாயிருக்கு. ஏறி உட்கார்ந்தா ஸ்டியரிங் இல்லை, என்னாகும். போய் ஆக்ஸிடண்டாகும்ணே. அது மாதிரிதான் இந்த வயசும்.
தம்பிங்களா இந்த வயசுல அதிகமாக உணாச்சி வசப்படுவீங்க, பின்னால வர்றத பற்றி கவலைப்படாமா தடபுடலா காரியத்தை செய்வீங்க, நிதானமான முடிவெடுக்க முடியாது, எல்லா விஷயத்தையும் மண்டையில போட்டு குழம்புவீங்க, யாரைப் பார்த்தாலும் அவுங்களே மாதிரி பெரிய ஆளா மாறணும்னு ஆசை வரும் ஆனால் அதற்கான முயற்சி செய்ய முடியாது, புது புது விஷயங்களை தெரிஞ்சுக்கணும்னு ஆசை. ஆமாம் தம்பி இந்த ஆசையில தான் வாலிப வயசிலே ஒரு பெக் அடிச்சுப்பாருடான்னு என் நண்பர்கள் சொன்னாங்களேன்னு குடிச்சு பார்த்தே இன்னைக்கு வர அதுலருந்து மீள முடியலைன்னு பாவ மன்னிப்பு கேட்கீங்களே, ஐயா, உடனே மனந்திரும்புங்க, இயேசு மன்னிப்பதற்கு தாராள மனசுள்ளவர். சரிண்ணே அறிவியல் அது இதுண்ணு மடக்கிப் போட்டீங்க. இப்ப என்னதான் செய்யனும் சொல்லுங்க.
இந்த இளவயதில் உங்களுக்கு முடிவெடுக்கும் திறமை குறைவாக இருந்தாலும் செய்து முடிக்கும் ஆற்றலை தேவன் உங்கள் சரீரத்தில் அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே அந்த ஆற்றலை சரியான முறையில் பயன்படுத்தினால் உங்கள் எதிர்காலம் தேவனுக்கு உகந்ததாகவும், சமுதாயத்திற்கு பயன்படும் பாத்திரமாகவும், உங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் நபராகவும் நீங்கள் விளங்கலாம். சுருங்கச் சொன்னால் நீங்கள் ஸ்டீரிங் இல்லா பஸ்ஸைப் போன்றவர்கள், சுக்கான் இல்லாத கப்பலைப் போன்றவர்கள். ஸ்டீரிங் இல்லா பேருந்தும் சுக்கான் இல்லா கப்பலும் வேகமாச் சென்றாலும் இலக்கு நோக்கிச் செல்வதில்லை. உங்களுக்குள் அளப்பரிய ஆற்றல் உள்ளது ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது என்ற முடிவெடுக்கும் திறமை குறைவாக இருப்பதால், உங்களுக்கு தேவை நீங்கள் முடிவெடுக்க உதவி செய்கிற உண்மையான, உங்கள் மீது கரிசனையுள்ள நல்ல ஆலோசனைக்காரர்.
" நான் உனக்கு போதித்து நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்". (சங்கீதம்: 32-8) என்ற நம்முடைய தேவனை விட, தேவனுடைய வார்த்தையை விட பெரிய ஆலோசகர் இந்த உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. தேவனுக்கடுத்ததாக உங்கள் வாழ்க்கையின் மேல் அதிக கரிசனை உள்ளவர்கள் உங்கள் பெற்றோர் தான் என்பதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருப்பதில்லை. எனவே பெற்றோருடைய ஆலோசனையை நாடுவது சாலச் சிறந்தது. இன்னும் உங்கள் ஆசிரியர்கள், உங்கள் போதகர்கள் இப்படி சொல்லலாம். ஆனால் இந்தப் பருவத்தில் உங்கள் நண்பர்களின் ஆலோசனை படி முடிவெடுப்பதென்பது, குருடன் குருடனுக்கு வழி காட்டுவது போன்றது, எனவே அந்த ஆலோசனையின் மீது அதிக நம்பிக்கை வைக்காதீர்கள். ஏனென்றால் அவனும் உன்னைப் போல் விடலைப் பருவத்தில் இருப்பதால் தீர்க்கமான முடிவை எடுக்கும் திறமை அவனிடத்திலும் குறைவுதான் (நான் சொல்லல, அறிவியல் சொல்லுது) பெற்றோரே உங்கள் விடலைகள் ஆளுதான் வாட்ட சாட்டமா இருக்கா மூளையெல்லாம் சின்னப் பசங்களுக்குள்ளதுதான் என்பதை உணர்ந்து பொறுமையாக கவனமாக அன்பாக பிள்ளைகளை வழிநடத்துங்க. நல்வழி படுத்துங்க. போதகர்களே வாலிபர்களுக்கு நல் வழி காட்ட தேவனுடைய பரிசுத்த ஞானத்தால் நிரம்பியிருங்கள், கடலில் அடிபடும் கப்பலை கரைசேர்க்கம் கலங்கரை விளக்கமாயிருங்கள், இது தான் இன்றைய நாளில் அவசியமான அத்தியாவசியமான தேவையாயிருக்கிறது.
எழுதியவர் -சகோ. சா.ரெவரெண்ட் செல்வக்குமார்






Comments
i am christian please contact me
RSS feed for comments to this post.